Sunday, 5 May 2019


காலங்களைக் கடந்த             மாமனிதன் காரல்மார்க்ஸ்! 
202 பிறந்தநாள்

ஆளும் வர்க்கத்துக்கும் அரசுகளுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால், பல நாடுகளில் இருந்தும் துரத்தப்பட்ட அந்த மாபெரும் சிந்தனையாளர் காரல்மார்க்ஸ்.

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் எப்போதும் காரல்மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. வறுமையும் நோயும் விடாது துரத்திக்கொண்டிருந்த காலத்தில்,  மார்க்ஸ் தனது ஏழ்மை குறித்து சிந்தித்து அதற்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அவர் சிந்தித்தார். தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளின் சிந்தனைகளைக் கரைத்துக் குடித்தவர்.

‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.

‘’ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொருகாலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இருந்தது இல்லை. ஆனால் பகிர்ந்ததுபோக, மிஞ்சியிருந்தது ‘உபரி மதிப்பு’ என்றும் இந்த உபரி மதிப்பே மீண்டும் ‘மூலதனம்’ ஆகிறது என்றும் மூலதனத்தின் மூலமே வர்க்கங்கள் தோன்றின என்றும் வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார். 

இப்படியான ஆய்வு முடிவுகளை வந்தடைவதற்கு மார்க்ஸ் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு அவர் கொடுத்த விலைகளும் கொஞ்சமல்ல.

 மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு சின்ன துயரக்கீற்று மட்டுமே. தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார், அதேபோல்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பும்கூட. ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே. 

மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’. அதற்குப் பின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உலகின் பல பாகங்களில் இருந்து உருவாகிவிட்டபோதும் ‘மூலதனம்’ எப்போதும் உலகின் ஆகச் சிறந்த நுால்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது. 

உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அரசு என்னும் வர்க்க நலன் பேணும் கருவி, கருத்தை முதலாகக் கொண்டுதான் சமூகம் இயங்குகிறது என்னும் பார்வைக்கு மாறாக பொருளின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஆராயும் பொருள்முதல்வாதம், மதம் மனிதனுக்கு அபினாக இருந்ததோடு எப்படி இரக்கமற்ற உலகத்தின் இரக்கமுள்ள ஆன்மாவாக மாறியது என்னும் சிந்தனை முன்னெடுப்பு, அந்நியமாதல் என மார்க்சின் ஆய்வுகள் விரிந்து பரந்தவை. மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவசியம் படித்து விவாதிக்கப்பட வேண்டியவை அவரது சிந்தனைகள். ‘தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து,  முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் கருவியான அரசையும் தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்’ என்ற அவரது கனவை லெனின் ரஷ்யாவில் நடத்திக்காட்டினார்.

மார்க்ஸின் சிந்தனைகள் எப்போதும் இறுதியானவை. மார்க்ஸுக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் காலத்தின் பாடங்களைக் கணக்கெடுத்து, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தத்தான் செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எந்தத் தியாகங்களையும் செய்யும் செம்படை எல்லா நாடுகளிலும் இருக்கிறது. 

மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதனின் 202வது பிறந்த நாள்இன்று.

-

1 comment: