Tuesday, 9 October 2018

BSNL நிறுவன நிதி நெருக்கடி தீர ஒரே வழி.....    ( தோழர் CKM அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம் )

BSNL நிதி நிறுவனத்தின் நிதி நெருக்கடி குறித்து  அனுதினமும் அதிர்ச்சியும் கவலையும் தரும்  செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் BSNL CMD தலைமையில் அனைத்து முதன்மைப் பொது மேலாளர்கள் (CGMகள்)கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மகாராஷ்ட்ரா CGM " அடுத்த மாதத்திலிருந்து ஊழியர்கள்/ அதிகாரிகள் சம்பளத்திலிருந்து 20% பிடிக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்களெல்லாம் நிதி நெருக்கடியை உணர்ந்து கடமை உணர்வோடு பணி ஆற்றுவார்கள் " என்று பேசியதாக ஊர்ஜிதமாகாத செய்தி உலா வந்தது.

தற்போது தெலுங்கானா  மாநில கிருஷ்ணா மற்றும் குண்ட்டூர் SSAக்களின் PGMகள் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில், " கடந்த 2 மாதங்களாக கரண்ட் பில் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை செய்திடக்கூட கார்ப்பரேட் / மாநில அலுவலகத்தால் தேவையான நிதியை ஒதுக்கிட முடியவில்லை;  ஆகவே SSA அளவில் அவசரகால நிதி உருவாக்கிட அதிகாரிகள்/ ஊழியர்கள் மாதாமாதம் ரூ.5000/ரூ.2000 த்தை வட்டியில்லா கடனாக தங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும் " என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். 

 15 % ஊதிய நிர்ணயப்பலனுடன் விரைவில் ஊதிய மாற்றம் வரும் என்று பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இதுபோன்ற செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆனால் நாம் அதிர்ச்சி அடையத் தேவை இல்லை.
2000த்தில் BSNL நிறுவனம் உருவாக்கப்பட்டபோது NFTE உள்ளிட்ட மூன்று சம்மேளனங்களுடன் அன்றைய வாஜ்பாய் அரசு அமைத்த அமைச்சர்கள் குழுவுடன்  நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஜீவாதாரமான கீழ்க்கண்ட மூன்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

1) BSNLக்கு Option கொடுத்த DOT ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மத்திய அரசே  பென்சன் வழங்கும். 

2) வேலை உத்திரவாதம்.

3) வருங்காலத்தில் BSNL நிறுவனம் எக்காரணத்தின் காரணமாகவும் நிதி நெருக்கடிக்கு ஆளாக மத்திய அரசு அனுமதிக்காது. ( BSNL will not be allowed to become financially unviable on any account)

மேற்கண்ட மூன்று வாக்குறுதிகளில் முதல் இரண்டு அமலாகி வருகிறது. மூன்றாவது வாக்குறுதி காற்றில் பறக்கவிட்டுவிட்டது மத்திய அரசு.

அதற்கு 2004லிருந்து ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்த BSNLEU செயலற்று போனதே காரணம். 2004ல் NFTE அங்கீகாரத்தில் இருந்தபோது BSNLன் நிதிநிலைமை மிகவும் நன்றாக இருந்தது. கையிருப்பு ரூ.40,000 கோடிக்கும் மேல். BSNLEU அங்கீகாரம் பெற்ற பின்பே நிலைமை மோசமானது.  BSNL நிறுவனத்தை ஸ்பெக்ட்ரம்  ஏலத்தில் பங்கேற்கவிடாமல் தடுத்துவிட்டு காலாவதி ஆகிப்போன, நமக்கு பயனற்ற 2G ஸ்பெக்ட்ரத்தை அனைத்து சர்க்குளுக்கும் BSNL தலையில் சுமத்தி 40,000 கோடியையும் ஸ்வாகா செய்து BSNL நிறுவனத்தை ஓட்டாண்டி ஆக்கியது மத்திய அரசு. வாய் மூடி மௌனியாய் ஆனது ஒரே அங்கீகாரச் சங்கமான BSNLEU. அதுவரை நாம் தனியார் டெலிகாம் கம்பெனிகளிடமிருந்து  பெற்றுவந்த ADC கட்டணத்தை ரத்து செய்து தனியார் கம்பெனிகளை ஊட்டி வளர்த்தது மத்திய அரசு. மேலும் அரசுத் துறை நிறுவனமான BSNLன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட்டு விட்டு தனியார் கம்பெனிகளுக்கு பல சலுகைகளை வாரி வழங்கியது மத்திய அரசு. இவற்றையெல்லாம் எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை நடத்த தவறியது  BSNLEU. இவற்றையெல்லாம் நாம் எடுத்துக் கூறுவது  குறை கூறவோ, குத்திக் காட்டவோ அல்ல. தவறு எங்கே என்று கண்டறிந்து அதனை தவிர்த்து வருங்கால போராட்டத்தை திட்டமிடவே.
BSNLஐ  நிதி மேம்பட்ட நிறுவனமாக மாற்றுவதற்கான உரத்த சிந்தனையின் வெளிப்பாடே இக்கட்டுரை.

2000த்தில் அன்றைய வாஜ்பாயி அரசு வழங்கிய புனிதமான  வாக்குறுதியை ( Solemn pledge)  நிறைவேற்ற வேண்டிய  கடமையும் கடப்பாடும் தற்போதைய மோடி அரசுக்கு உள்ளது.  இனியும் காலந்தாழ்த்தாமல் வாஜ்பாயி  அரசின்  வாக்குறுதியை  ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து மத்திய அரசிடமிருந்து  தேவையான  நிதியைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும். இதற்கான சட்ட ஆலோசனைகளையும் நாம் பெற வேண்டும். அடுத்த  மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் நாள் நெருங்குகிறது.

அரசு நமது நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்தால் மக்களிடம் சென்று  BSNL நிறுவனத்தின் நிதி ஆதாரம் மேம்பட்டால்தான் சிறந்த சேவையைத் தர இயலும் என்பதை  எடுத்துரைத்து நமக்கு சாதகமான பொதுக் கருத்தை உருவாக்கி அரசுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும். அதே சமயத்தில் சில பொது மேலாளர்கள் தெரிவித்துள்ள ஊழியர்களிடம் வட்டியில்லாக் கடன் பெறும் திட்டத்தை ஏற்க முடியாது. அதனை நிராகரிக்க வேண்டும்.அது நீண்டகாலப் பலனும் தராது. மோடி அரசை அணுகுவதுதான்  ஒரே வழி.

நன்றி L. சுப்பராயன்
                     NFTE
தமிழ் மாநில பொருளாளர்

No comments:

Post a Comment